மகா
மட ஜனங்களே!
நல்லா கேட்டுக்கோங்ஙோ..
நான்
ஒரே சூரியன் தான்.
மெதுவாத்தான் காயுவேன்.
புழுபுழுங்கப்பிடாது.
அவன் பாட்டுக்கு..
அந்தப்பய..
வருணன் தான்,
பெஞ்சிட்டு போயிடுவான்.
நான்
வந்து அம்புட்டையும்
ஒத்தையிலேயே
காய வைக்கனுமின்னா…
நாளாவும்.நை..நை,ங்ஙப் பிடாது.
மழை பெஞ்சு
வெள்ளம் வந்தா
அழுது ஒப்பாரி வைக்கியளே!
அப்ப
மழையே வேண்டாமோ?
நீங்க
சொல்லுத அளவுக்கு
மட்டும் பெய்யனுமினா..
குடிதண்ணீ,
விவசாயத்
தேவையெல்லாம்
நீங்களே பாத்துகிடுவீங்களா?
முட்டாள்களா..
மழை
வந்து …இருந்து …ஓடிப்போன….
பாதையெல்லாம் மறிச்சிட்டியளே..
வத்தாத குளத்தையெல்லாம்
வானளாவ கட்டிடம் கட்டிப் போட்டியளே..
ஒங்கள காப்பாத்தத்தான்
சூரியன்,மழையெல்லாம்..
தவமா தவமிருந்து வாரோம்.
ஆனா..ஒங்களுக்கு.,
மரியாதை குடுத்து
மரியாதை வாங்கத் தெரியலையே..
சரி,சரி.
அடுத்த மழைவரைக்கும்
நம்ம சக்திக்கு
என்ன முடியுமோ அதை
ஒங்காளுங்களைப் போல
லஞ்சம்,பித்தலாட்டம் இல்லாம..
அடுத்த தேர்தல் பிரச்சாரமா இல்லாம,
ஒழுங்க செஞ்சு தாரேன்.
அதுவரைக்கும்
அரசாங்கத்தையே நம்பாம,
அதிகாரிகளையே குறை சொல்லாம..
அவங்கவங்க
தெரு,ஊரு,குளம்,குட்ட,
சாக்கடை,வாறுகால்,வாய்க்காலெல்லாம்
ஒங்க
சொந்த துட்டு,சொந்த உழைப்புல
பேணி வையுங்க.
சுத்தம்,சுகாதாரம்
ஒரு ஆளூ,ஒரு அரசாங்க வேலை இல்லை.
வாய் கிழியப் பேசி
வரவழைக்கிற சமாச்சாரமில்லை.
ஊரு கூடித் தேரை இழுங்க.
உருப்படுவீங்க.
அடுத்த மழையில
ஒங்க
மொகரகட்டையெல்லாம்
மேகத்துக்கு நடுவில நின்னு
பாக்கத்தானே போறேன்.
இன்னையிலிருந்து
சூரியன் ஆட்சி.
காய்ச்சி குடிச்சுபுடுவேன்.
வ்வரட்டா..!!!!
பே.பரிமேலழகன்
November 18, 2015