நான் பெத்த மக்கமாரே..
நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..
நல்லா இருக்கியளா..
நல்லா சாப்பிடுதையளா..
மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய..
ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் போனாலும்
உங்காத்தா நான் உருட்டித் தந்த சோத்துருண்டை
உள் நெனைவா உருண்டு நம்ம உறவைச் சொல்லும்.
ஒங்களுக்கு நான் தாய் என்ற ஒத்த பெருமை போதும்.
நான் இங்கிட்டு நீங்க அங்கீட்டுன்னாலும்
நெனைக்காத பொழுதுண்டா
நான் பெத்த நல்ல ராசாக்களே..
சீவம் இருக்குமட்டும்
இந்தப் பூமித்தாய்க்கு தான் நான் உழைப்பேன்.
சீவம் போனா..நீங்க வந்து எரிச்சாத்தான்..
நீங்க பெத்த இவவயறு வெந்து சாம்பராகும்.
பெத்த கடனா அது ஒன்னுக்குத்தான்
சவத்து மூதி இந்த சீவன் ஏங்குது.
எங்கிருந்தாலும் வந்திருங்ஙெ..செத்தாலும்,
நீங்க வந்ததை தெரிஞ்சுக்குவா ஒங்க ஆத்தா..!
பே.பரிமேலழகன்
September 29, 2016