நண்பர்களே! அன்பு வணக்கம்.
இரு மனங்களை இணைக்கும் பந்தம் திருமணம்.
இரண்டு குடும்பங்கள் கூட்டமாய் உறவில் மலர்வதும் ஒரு திருமணம் மூலமே.
என்றபோதிலும் கடைசி வரை., கணவன் மனைவியாய் வாழும் நிலையிலும், அந்த ஆணும் பெண்ணும் தனித்தனியாய் வாழ்வது போன்றே வாழ்க்கை அமைந்தவர்கள் மனநிலை, வாழும் போதே நரகத்தில் வாழ்வதற்கு ஒப்பாகும்.
வாழ்க்கைப்பட்டு வந்த பெண்ணை ,ஆணின் குடும்பம் காலம் பூரா அந்நியமாகவே நடத்தும் அவலங்களும் ஏராளம்.
கணவனும் அவன் வீட்டாரும் வாழ்க்கைப்பட்டுவந்த பெண்ணின் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, வந்த பெண் தங்கள் குடும்பத்திற்கே அடிமை போலவும் நடத்த முற்படும் கல்நெஞ்சராய் வலம் வருவர். அதுவே நியாயம் என்னும் மமதை வேறு.
கல்யாணக் காலம் வரை அருமை பெருமையாய் வளர்ந்த பெண், இது போல் கீழ்த்தரமாய் நடத்தும் புகுந்த வீட்டில் வசிப்பதும், புசிப்பதும், வாழ்வதும் பெருங்கொடுமை.
திருமணத்திற்குப் பின், புகுந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு நெருக்கமாய் இருக்க வேண்டியது யார்? நம்பிக்கையோடு நடத்த வேண்டியது யார்? நிறைந்த அன்பால் நெகிழ்சியையும், மகிழ்ச்சியையும் தொடர்ந்து தர வேண்டியது யார்? படுக்கையில் மட்டுமின்றி வாழ்க்கை முழுதிற்கும் அந்தப் பெண்ணிண் நெருங்கிய உறவு/உறவினர் யார்?
இது தவிர, தாயா? தாரமா? யார் முக்கியம் என்ற கடும் அற்பத்தனமான வாதங்களால் சிதைக்கப் படுவதும் வந்த பெண்ணிண் வாழ்க்கைதான்.
தாய் உன்னைக் கருவில் சுமக்கிறாள்.
தாரம் உன் கருவைத் தன்னில் சுமக்கிறாள்.
ஒருத்தி கருவில் சுமந்தாள்.
ஒருத்தி உன் கருவைச் சுமந்தாள்.
இருவருமே முக்கியந்தான் என்றாலும் தாரமே அதிமுக்கியம், அவளுக்கு கணவனை விட்டால் அந்த வீட்டில் வேறு நெருக்கமான உறவில்லை.
தாய், பிள்ளைகள் அனைவருக்கும்., சொந்த, நம்பி வந்த பிள்ளைகளுக்கும் சமமான தெய்வமாய், பிள்ளைகள் உணரும் வண்ணம் வாழ வேண்டும்.
நான்மணிக்கடிகை பாடல்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்
துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்
ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோடு
எண்ணக் கடவுளு மில்.
விளக்கம்:
ஒருவனுக்கு எல்லா உறுப்புக்களும் சிறப்பாய் இருந்தாலும், கண் அவை எல்லாவற்றையும் விட மேலானது. கண் இருந்தால் தான் மற்ற உறுப்பின் பயன்களையும் உலகத்தையும் ஒருவரால் முழுமையாய் அநுபவிக்க முடியும்.
அதுபோல் புகுந்த வீட்டில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும், தன்னைத் திருமணம் செய்து கொண்ட கணவனைப் போல நெருங்கிய உறவினர் ஒரு பெண்ணுக்கு வேறு யாரும் இல்லை.
கணவன் ஒருவனை மட்டுமே முழுதாய் நம்பி வந்துள்ள பெண்ணுக்கு, அவனின் மாறாத அன்பான உறவு மூலமே மற்ற உறவுகளையும் ஏற்றுக் கொள்ள முடியும்.
அந்தப் பெண்ணைப் பொறுத்தவரை ,கணவனே கண் கண்ட உறவு, நட்பு, தெய்வம்.
பெற்றோருக்குத் தம் பிள்ளைகளைப் போலச் சிறப்பான பொருள் வேறொன்றில்லை.
அது போல் குழந்தைகட்குத் தாயை மிஞ்சின தெய்வமில்லை.
நண்பர்களே., எத்தனையோ கல்வி கற்றாலும், நல்ல விசயங்களைத் தேடி எடுத்து இயம்பினாலும் சம்பந்தப் பட்டவர்கள் பொறுப்பை உணர்ந்து நடக்கா விட்டால், பெண்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவது சிரமமே.
நன்றி! வணக்கம்!!
பே.பரிமேலழகன்
November 24, 2014