பெயருக்கு ஏற்றவாறு உருவத்தில் அழகு ….
உள்ளத்தில் அழகு ….
உடையினில் அழகு….,
நடையினில் அழகு …..
குரலில் அழகு …..
இப்படி பல்வேறு அழகுக்குச் சொந்தக்காரர் இவர்.
அழுத்தம் திருத்தமான பேச்சு, அழகிய சிலேடைகள் பொருந்திய உரைவீச்சு, உணர்வுகளை மெல்லினம் ஆக வெளிப்படுத்தும் தெளிந்த பேச்சு இப்படி பல்வேறு திறமைகளுக்கு உரிமையானவர் இவர்.
வீட்டில் ஆகட்டும் பணிபுரிந்த இடத்தில் ஆகட்டும் நண்பர்கள் மத்தியில் ஆகட்டும் இவர் ஒரு வங்கத்து சிங்கம் என்றால் மிகையில்லை. இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு வலு சேர்க்க இவர் அடுக்கி வைத்த வரலாற்று சம்பவங்கள் நெஞ்சுக்குள் இன்றும் அசை போடுகின்றது. ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து ரசித்து சுவைத்து சுவைத்து இனிமையாய் இளமையாய் கற்றுத் தருவதில் அவருக்கு நிகர் அவர்தான்…..
தான் செய்வது தவறு என்றாலும் அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் தைரிய நெஞ்சுக்கு சொந்தக்காரர் அவர்.
தான் பணியாற்றிய துறையைத் தவிர எத்தனையோ விஷயங்களில் அவருக்கு இருந்த ஆர்வம் எங்களை மிரளச் செய்யும். மனங்களை மலரச் செய்யும் …..
கலையாக இருக்கட்டும், கலாச்சாரமாக இருக்கட்டும், ஜோதிடமாக இருக்கட்டும், பக்தியாக இருக்கட்டும், பாசமாக இருக்கட்டும், பசுமையாக இருக்கட்டும் அனைத்தையும் ஒருசேர வகை வகையாக பிரித்து வரிசை வரிசையாக தொகுத்து உரையாடுவதில் வல்லவர் இவர்.
நெஞ்சுக்குள் நினைத்ததை மற்றவர்களுக்கு வலிக்காது சொல்லில் தேன் தடவி தரும் தேன் ஓடை அவர்.
தெளிந்த நீரோடையாய் கருத்துக்களை கண்ணல் சுவையாய் இதயத்தில் பதிய வைப்பதில் வில்லாதி வில்லன் அவர்.
வீரத்திலும் தீரத்திலும் வலிமையான பாறையை விட உறுதியானவர் அவர் எளிதில் உடைந்து விடாத உள்ளத்திற்கு சொந்தக்காரர் அவர்.
தூர நின்று பார்த்தாலும் நான் தொலை தூரமாய் ரசித்த மேகவண்ணச் சித்திரம் அவர்.
முகநூலில் முத்துக் குழித்த மகத்துவக்காரர் அவர்.
அவர் பணி ஓய்வுக்குப் பின் அவரோடு நெருங்கிய அவர் நிழல் கண்டு ஒதுங்கிய நட்பு கூட்டம் ஏராளம் ஏராளம். நண்பர்களுக்காக நேரம் ஒதுக்குவதில் அவர் தாராளம் தாராளம் …..
பல்நோக்கு திறமைகளை இல்லம் எங்கும் இழைத்து வந்த இன்முகம் அவர்.
இந்த அண்டம் காணாத ஆகாச புத்திரர் அவர்.
– கவின் வேந்தன், வள்ளியூர்.